பல்லடம் அருகே குடும்ப தகராறில் மாமியார் மண்டையை உடைத்த மருமகன் கைது
பல்லடம் அருகே குடும்ப தகராறில் மாமியார் மண்டையை உடைத்த மருமகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
பல்லடத்தில் குடும்ப தகராறில் மாமியாரை தாக்கி மண்டையை உடைத்த மருமகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் குமார்( 60) பனியன் தொழிலாளி. இவரது மனைவி வசந்தா(55) இவர்களது மகளும், பல்லடம் காரணம்பேட்டையை சேர்ந்த பால்ராஜ் மகன் அருணாச்சலம் (48) என்பவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சமீபகாலமாக அருணாச்சலத்துக்கு அதிகமான குடி பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவத்தன்று மது போதையில் இருந்த அருணாச்சலம் வசந்தாவின் வீட்டுக்கு சென்று, தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு வற்புறுத்தினார். அதற்கு வசந்தா தனது மகளை மருமகனுடன் அனுப்புவதற்கு மறுத்தார். இதனால் மாமியார் மருமகன் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அருணாச்சலம் தனது மாமியார் வசந்தாவின் தலையில் மதுபான பாட்டிலால் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தா, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அருணாச்சலத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.