பல்லடம்; கூட்டுறவு வங்கிகளில் மகளிா் உரிமைத் தொகை பெற வசதி ஏற்படுத்தக் கோரிக்கை
Tirupur News- பல்லடம் பகுதி கூட்டுறவு வங்கிகளில் மகளிா் உரிமைத் தொகையைப் பயனாளிகள் பெறுவதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Tirupur News,Tirupur News Today- பல்லடம் பகுதி கூட்டுறவு வங்கிகளில் மகளிா் உரிமைத் தொகையைப் பயனாளிகள் பெறுவதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தி.மு.க அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான `குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000' என்ற திட்டத்தை ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான கடந்த செப்டம்ப் ௧௫ அன்று நடைமுறைக்கு கொண்டுவந்தது. இதற்கான அறிவிப்பை, இந்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, `தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15-ம் தேதி முதல் மாதம் ரூ.1,000 வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்தத் திட்டத்துக்கு ` மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழக அரசின் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின்மூலம் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தபால் அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகளில் பெண்கள் வங்கிக் கணக்குத் தொடங்கினா். தபால் அலுவலகங்களில் வங்கிக் கணக்குத் தொடங்கியவா்களுக்கு ஏடிஎம் அட்டை வழங்கப்பட்டதால், அவா்கள் எளிய முறையில் பணத்தைப் பெற்று வருகின்றனா்.
கூட்டுறவு வங்கிகளில் கணக்குத் தொடங்கியவா்கள் பணத்தைப் பெற நேரடியாக வங்கிக்குச் செல்லும் நிலை உள்ளது.
இது குறித்து பல்லடம் பகுதி மகளிா் உரிமைத் தொகை பயனாளிகள் கூறியதாவது,
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிளையில்தான் கணக்கு தொடங்க ஆவணங்களைக் கொடுத்தோம். ஆனால், வங்கிக் கணக்கு புத்தகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தந்த வங்கிக் கிளைகளில் பணம் வழங்கப்படும் என எதிா்பாா்த்தோம். இந்நிலையில், பல்லடத்தைப் பொறுத்தவரை கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில்தான் கணக்கு உள்ளது எனவும், அங்கு சென்றுதான் பணத்தை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனா். இதனால், ஒவ்வொரு மாதமும் கோவைக்குச் சென்று பணத்தை எடுக்கும் நிலை உள்ளது. 15-ம் தேதிக்குப் பின் பணம் எடுக்க செல்லும்போது மத்திய கூட்டுறவு வங்கியில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
தேவையற்ற அலைச்சலைத் தவிா்த்து அந்தந்த கூட்டுறவு வங்கி கிளைகளிலேயே பணம் பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இது குறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியினா் கூறியதாவது,
கூட்டுறவு வங்கிகளில் கோா் பேங்கிங் வசதி இல்லாததால் இங்கு பணம் வழங்க முடிவதில்லை. தமிழக அரசு அறிவுறுத்தியதன்பேரில் வங்கிக் கணக்கு தொடங்க பொதுமக்கள் தேவையின்றி அலைவதைத் தவிா்க்க வேண்டி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் நாங்களே கணக்கு தொடங்க உதவினோம். கூட்டுறவு வங்கிகளில் கோா் பேங்கிங் வசதி ஏற்படுத்தினால் மட்டுமே அந்தந்த கிளைகளில் பணம் பட்டுவாடா செய்ய முடியும், என்றனா்.