நொய்யலை மீட்க உதயமானது குழு
பல்லடத்தில் 'நொய்யல் மீட்பு மற்றும் பாதுகாப்பு குழு' உருவானது.;
பல்லடம் வனம் அமைப்பு சார்பில், 'வளம் நோக்கி' கருத்தரங்கம் நடந்தது. செயல் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். தலைவர் சுவாதி கண்ணன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராஜஸ்தானை சேர்ந்த 'தண்ணீர் மனிதர்' ராஜேந்திர சிங், சிறுதுளி அமைப்பு நிறுவனர் வனிதா மோகன், தெலுங்கானா நீர்வள மேம்பாட்டு கழக தலைவர் பிரகாஷ்ராவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ராஜேந்திர சிங் பேசுகையில், 'நதிகள் அழிவது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. ஊழல் அதிகம் இருப்பதால், நீர் ஆதாரங்களை அரசு கவனிப்பதில்லை. தண்ணீரை காப்பாற்றினால் மட்டுமே, உலகை காப்பாற்ற முடியும். உண்மையான பங்களிப்புடன் நதிகளை மீட்க செயல்பட வேண்டும் என்றார். பிறகு, 'நொய்யல் மீட்பு மற்றும் பாதுகாப்பு குழு' ஏற்படுத்தப்பட்டது. இதற்கு, 'சிறுதுளி' நிறுவனர் வனிதா மோகன் தலைமை வகிப்பார்.
பல்லடம் வனம் அமைப்பு, கோவை கவுசிகா நதி மேம்பாட்டு சங்கம், காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு, அத்திக்கடவு - அவிநாசி போராட்ட குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இணைந்தனர்