புரட்டாசி மாதம் எதிரொலி; பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தி குறைப்பு
Tirupur News- புரட்டாசி மாதம் காரணமாக நுகர்வு குறைந்ததால், கறிக்கோழி உற்பத்தி 25 சதவீதம் குறைக்கப்பட்டது.;
Tirupur News,Tirupur News Today- புரட்டாசி மாதத்தையொட்டி, நுகா்வு குறைந்துள்ளதால் பல்லடம் வட்டார கோழிப் பண்ணைகளில் 25 சதவீதம் கறிக்கோழி உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதிகளில் சுமாா் 4 -ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
கறிக்கோழி நுகா்வைப் பொறுத்தே பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினா் தினசரி விலை நிா்ணயம் செய்து அறிவிக்கின்றனா். புரட்டாசி விரதம் காரணமாக தற்போது கறிக்கோழி நுகா்வு குறைந்துள்ளது. இதனால், கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி 25 சதவீதம் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளா் சின்னசாமி கூறியதாவது: பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கறிக்கோழி பண்ணைகள் மூலம் தினசரி 10 லட்சம் கோழிகள் உற்பத்தியாகின்றன. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகினறன.
தற்போது புரட்டாசி மாத விரதம் காரணமாக கோழி இறைச்சி நுகா்வு குறைந்துவிட்டது. இதனால் கறிக்கோழிகள் பண்ணைகளில் தேக்கம் அடைவதைத் தவிா்க்கும் வகையில் 25 சதவீதம் உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சி நுகா்வு அதிகரிக்கும்போது வழக்கமான அளவுக்கு உற்பத்தி செய்யப்படும் என்றாா்.
பல்லடம் வட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. புரட்டாசி மாதம் துவக்கத்தில் இருந்தே, கடைகளில் கறிக்கோழி விற்பனை வழக்கத்தை விட குறைவாக இருப்பதால், ஆர்டர்களும் 25 சதவீதம் வரை குறைந்து வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் புரட்டாசிக்கு பிறகு மீண்டும் பழைய விற்பனையை கறிக்கோழி எட்டிவிடும் என, இறைச்சிக்கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.