பல்லடம் கொலை வழக்கு: தப்பி ஓட முயன்ற\முக்கிய குற்றவாளியை சுட்டுப் பிடித்த காவல்துறை

பல்லடம் நால்வர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தப்பி ஓட முயற்சிக்கும் போது காவல்துறையினர் காலில் சுட்டுப் பிடித்தனர்;

Update: 2023-09-07 05:02 GMT

தப்பிக்க முயன்ற முக்கிய குற்றவாளியை காலில் சுட்டு பிடித்த காவல்துறை 

பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி கள்ளகிணறு குறைத்தோட்டம் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் மோகன்ராஜ் (வயது 49). சம்பவத்தன்று இவருடைய வீட்டிற்கு வரும் வழியில் அமர்ந்து மதுக்குடித்துக்கொண்டிருந்த நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் மகன் வெங்கடேஷ், திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னச்சாமி என்பவர் மகன் செல்லமுத்து (24), தேனி மாவட்டம் உத்தமபாளையம் முத்தாலபுரம் பகுதியை சேர்ந்த வனராஜ் மகன் விஷால் என்கிற சோனை முத்தையா(20) ஆகிய 3 பேரையும் கண்டித்தார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மோகன்ராஜை அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் 3 பேரும் சேர்ந்து வெட்டிக்கொன்றனர். இதை தடுக்க வந்த மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமாரையும் துண்டு துண்டாக வெட்டி கொன்று விட்டு தப்பிச்சென்றனர்.

வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை குடும்பத்துடன், போதை கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

கோவை மண்டல ஐ.ஜி. பவானிஈஸ்வரி மற்றும்காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நெல்லை, திருச்சி, தேனி ஆகிய பகுதிகளுக்கு சென்று கொலையாளிகளை தேடி வந்தனர். இதில் திருச்சியை சேர்ந்த செல்லமுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார், விஷால் என்கிற சோனை முத்தையா ஆகிய 2 பேரும் நேற்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்திற்கு வெங்கடேஷை காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, அவர்கள் மீது மண்ணைத் தூவி தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் காவல்துறையினர் வெங்கடேஷ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது நான்கு குண்டுகளில் இரண்டு குண்டுகள் காலில் பாய்ந்தது. இதில் இரண்டு கால்களும் முறிந்ததாக கூறப்படுகிறது.

கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நெல்லையைச் சேர்ந்த வெங்கடேஷுக்கு 2 கால்களும் முறிந்துள்ளது. இதையடுத்து அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News