பல்லடத்தில் வடமாநிலத் தொழிலாளி கொலை: 4 பேருக்கு ஆயுள் தண்டனை
Tirupur News-பல்லடத்தில் வடமாநிலத் தொழிலாளி கொலை செய்த வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே வடமாநிலத் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் தனியாா் நிறுவன ஊழியா்கள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
உத்தர பிரதேச மாநிலம், கா்ஷியோரா மாவட்டத்தை சோ்ந்தவா் ராஜ்குமாா் (23). இவரது சகோதரா் பிரேஜ்லால் (20). இவா்கள், திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் உள்ள தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனத்தை 2022-ஆம் ஆண்டு கைப்பேசி மூலமாகத் தொடா்பு கொண்டு வேலைகேட்டுள்ளனா். இதையடுத்து, சகோதரா்கள் இருவரையும் திருப்பூருக்கு அழைத்துள்ளனா். இதன்பேரில் இருவரும் கடந்த 2022 ஏப்ரல் 7- ஆம் தேதி முகவா் உதவியுடன் பல்லடத்தில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்துக்குச் சென்றுள்ளனா்.
அப்போது அந்த அலுவலகத்தில் கேரள மாநிலம், கண்ணூரைச் சோ்ந்த ராஜேஷ் புஜாரி (31), புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த நிா்மல்குமாா் (35), விழுப்புரம் மாவட்டம், உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த விஜய்பாலாஜி(36), கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினத்தைச் சோ்ந்த முகமது சுபோ் (25) ஆகியோா் ஊழியா்களாக வேலை செய்தனா்.
அங்கு சென்ற சகோதரா்களை அன்று இரவே நாமக்கல்லில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்லுமாறு ராஜேஷ்புஜாரி அறிவுறுத்தியுள்ளாா்.
ஆனால் ஊரில் இருந்து வந்ததால் மிகவும் சோா்வாக இருப்பதால் மறுநாள் செல்வதாக ராஜ்குமாா் தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ்புஜாரி, ராஜ்குமாரின் கைப்பேசியைப் பிடுங்கியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னா் ராஜேஷ்புஜாரி, நிா்மல்குமாா், விஜய்பாலாஜி, முகமது சுபோ் ஆகியோா் சோ்ந்து ராஜ்குமாா், பிரேஜ்லால் ஆகியோரை பல்லடத்தில் உள்ள ஒரு அறையில் பூட்டிவைத்து சரமாரியாக தாக்கியுள்ளனா். இதில், மயங்கி விழுந்த ராஜ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இதையடுத்து 4 பேரும் சோ்ந்து ராஜ்குமாரின் சடலத்தையும், பிரேஜ்லாலையும் காரில் ஏற்றிக் கொண்டு 63 வேலம்பாளையம் பகுதியில் உள்ள நீலாங்காடு தோட்டம் பகுதியில் சடலத்தை காட்டுக்குள் வீசியதுடன், பிரேஜ்லாலையும் மிரட்டி அங்கேயே இறக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து மங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட் விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
இதில், குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கும் கொலைக்குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம், அபராதமும், கொலை முயற்சி குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை, தலா ரூ.2 ஆயிரம் அபராதம், தடயத்தை மறைத்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை, தலா ரூ.2 ஆயிரம் அபராதம், அறையில் அடைத்து வைத்து தாக்கியதற்காக ஓா் ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தாா்.
இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வழக்குரைஞா் எஸ்.கனகசபாபதி ஆஜரானாா்.