ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டங்களை நிறைவேற்ற "நம்ம நல்லாறு நடைபயணம்" - விவசாயிகள் சங்கம் முடிவு
Tirupur News. Tirupur News Today- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் "நம்ம நல்லாறு நடைபயணம்" வருகிற ஜூன் 10, 11, 12 தேதிகளில் நடைபெற உள்ளது.
Tirupur News. Tirupur News Today- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், பல்லடம் சங்க அலுவலகத்தில் நடந்தது.
திருப்பூர் மாவட்ட தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் பல்லடம் சுப்பிரமணி,உடுமலை ராஜகோபால்,தாராபுரம் வெங்கட்ராமன், திருப்பூர் ஏசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி வரவேற்றார். திருப்பூர் மாவட்ட செயலாளர் குமார் விளக்க உரையாற்றினார்.
பின்னர் இந்தக் ஆலோசனைக் கூட்டத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் ஏற்பட்டு வரும் நீர் பற்றாக்குறையை போக்கிடவும், பாசன விவசாயிகள் பாதிப்பு இல்லாமல் பயிர் செய்து உணவு உற்பத்தியை பெருக்கிடவும், ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டங்களை விரைவாக நிறைவேற்றிட வேண்டும் என திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசு தரப்பில் அவ்வப்போது நிபுணர் குழு அமைப்பது உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்படுகிறது.
ஆனாலும், இந்த திட்டத்தின் அவசியம் குறித்து போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே இனியும் தாமதம் செய்யாமல் இந்த அணைத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் "நம்ம நல்லாறு நடைபயணம்" வருகிற ஜூன் 10, 11, 12 தேதிகளில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் துவங்கி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம் ஒன்றியங்கள் வழியாக உடுமலையை அடைந்து கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.
10-ம் தேதி துவக்க விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், த.வி.ச மாநில துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு மற்றும் 12-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் த.வி.ச. மாநில தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். எனவே, இந்த நடைபயணத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கம் திருப்பூர் மாவட்ட குழு கேட்டுக் கொள்கிறது என்பது உள்ளிட்டதீர்மானங்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அருண்பிரகாஷ், லோகநாதன், லெனின், ஈஸ்வரமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.