பல்லடம் அருகே கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்திய லாரிகள் சிறைபிடிப்பு
பல்லடம் அருகே கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்திய லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள்.
பல்லடம் வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்திய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மணல், ஜல்லி கற்கள், எம்சாண்ட் உள்பட கனிம வளங்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் இருந்து தான் அதிக அளவில் புளியரை என்ற கிராமம் வழியாக கடத்தப்படுகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும் கனிம வளங்கள் கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனகர வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுது ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சுக்கம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் இது பற்றி பதாகையும் கிராம மக்கள் வைத்தனர். இந்த நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற நான்கு கேரள மாநில பதிவு எண் கொண்ட லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்த பல்லடம் போலீசார்,மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தத்தின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.