பல்லடம் மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா, வரும் 13ம் தேதி துவக்கம்
Tirupur News-பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் முத்துக்குமாரசாமி மலை கோவிலில் கந்த சஷ்டி விழா, வரும் திங்கட்கிழமை துவங்குகிறது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் புகழ் பெற்ற முத்துக்குமாரசாமி மலை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு பக்தர்கள், விழாவின் தொடக்க நாள் அன்று காப்பு கட்டி விரதத்தை தொடங்குவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற 13-ம் தேதி (திங்கட்கிழமை) மகா கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. தொடர்ந்து தினசரி காலை 8.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் யாகசாலை பூஜைகள், சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனையும், தினசரி ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து 18 -ந்தேதி காலை 8.30 மணிக்கு மண்டபார்ச்சனையும், 96 வாசனை திரவியங்கள் கொண்டு சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெற உள்ளது. மேலும் அன்று காலை கந்த சஷ்டி விழாவும், மாலையில் சூரசம்ஹார விழாவும் நடைபெற உள்ளது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9. 45 மணி முதல் 10. 15 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள கொங்கணகிரி முருகன் கோவில், திருமுருகன் பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவில், காங்கயம் அருகில் உள்ள சிவன்மலை முருகன் கோவில், மங்கலத்தை அடுத்துள்ள மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்ரமணியர் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில், கந்தசஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார விழாக்களுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.