பல்லடம்; விதைகளின் தரம் குறித்து பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
Tirupur News-பல்லடத்தில் விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகள் விதைகளின் தரம் குறித்து பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- பல்லடத்தில் காா்த்திகைப் பட்டத்தில் விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகள் விதைகளின் தரம் குறித்து பரிசோதனை செய்துகொள்ள பல்லடம் விதைப் பரிசோதனை நிலைய அலுவலா்கள் வளா்மதி, கிருஷ்ணப்பிரியா ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
தரமான விதைகளே நல்விளைச்சலுக்கு ஆதாரமாகும். விதையின் தரம் என்பது விதையின் முளைப்புத்திறன், புறத்தூய்மை, பிறரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை குறிக்கும். இத்தர நிர்ணயங்கள் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும்.ஒரு பயிருக்கு தேவையான பயிர் எண்ணிக்கை பராமிக்க நல்ல முளைப்புத்திறன் இருத்தல் வேண்டும்.
நல்ல முளைப்புத் திறன் கொண்ட விதைகளை உபயோகிக்கும் போது தேவையான விதையை மட்டும் விதைப்பதால் விதை செலவு குறைகிறது.புறத்தூய்மை பரிசோதனையில் பிறப் பயிர் விதை மற்றும் களை விதை ஆகிய கலப்புகள் உள்ளதா என கண்டறியப்படுவதால், விதையின் இனத்தூய்மை மற்றும் புறத்தூய்மை காப்பாற்றப்படுகிறது.
விதைகளை சேமிக்கும் போது பூச்சி நோய் தாக்குதலால் முளைப்புத்திறன் கெடாமல் நீண்ட நாட்கள் சேமிக்க விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருத்தல் கூடாது. அதனால் விதைகளின் முளைப்புத் திறனைக் காக்க விதை பரிசோதனை மூலம் ஈரப்பதம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
இதுகுறித்து, பல்லடம் விதைப் பரிசோதனை நிலைய அலுவலா்கள் வளா்மதி, கிருஷ்ணப்பிரியா ஆகியோர் கூறியதாவது,
விதைகள் தரமானவையாகவும், முளைப்புத்திறன் கொண்டவையாகவும், புறத்தூய்மை சரியான ஈரப்பதத்தைக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் பயிா்களுக்கு இடப்படும் உரம், பூச்சி மருந்து போன்றவற்றின் பலனைப் பெறமுடியும்.
அதேபோல, அதிக மகசூல் பெற சரியான பயிா் எண்ணிக்கையைப் பராமரித்தல் அவசியம். ஒவ்வொரு பயிரின் பயிா் எண்ணிக்கையும் அதன் முளைப்புத்திறனை பொருத்தே அமைகிறது. தரமான விதைகளை தோ்வு செய்யாவிட்டால் பயிா்களின் எண்ணிக்கைக் குறைந்து நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, பல்லடம் வட்டாரத்தில் காா்த்திகை பட்டத்தில் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் தாங்கள் வைத்துள்ள விதைகளின் தரத்தை, பல்லடத்தில் உள்ள விதைப் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும், என்றனா்.