பல்லடம்; அருள்புரத்தில் பேக்கரி டீக்கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரெய்டு
Tirupur News- பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் உள்ள பேக்கரி டீக்கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு நடத்தினா்.;
Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் பகுதியில் உள்ள பேக்கரி டீக்கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு செய்தனா்.
பல்லடம் அருகே கரைப்புதூா், கணபதிபாளையம் ஊராட்சிப் பகுதிகளில் அதிகமான பேக்கரிகள், ஓட்டல்கள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். மேலும் இந்தப் பகுதிகளில் தொழிலாளா்களும் அதிக அளவில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனா்.
இவா்கள் இந்தப் பகுதிகளில் உள்ள பேக்கரிகள், ஓட்டல்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனா். இந்த பேக்கரிகள், ஹோட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதாகப் புகாா் எழுந்தது. அதைத் தொடா்ந்து, பல்லடம் பகுதி உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் கிருஷ்ணமூா்த்தி அருள்புரம், சின்னக்கரை, கரைப்புதூா் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட 35 கடைகளில் ஆய்வு செய்தாா்.
இதில் காலாவதியான 10 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், சுகாதாரமற்ற 4 ஓட்டல்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 5 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இது குறித்து பல்லடம் வட்டார உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் கிருஷ்ணமூா்த்தி கூறுகையில், இந்தக் கள ஆய்வுகள் தொடா்ந்து அனைத்துப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும். உணவுப் பொருள்கள் தயாரிப்பவா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையின் விதிமுறைகளைப் பின்பற்றி உணவுப் பொருள்களைத் தயாரித்து அரசின் வழிகாட்டுதல்படி விற்பனை செய்ய வேண்டும், என்றாா்.