வீட்டைப் பூட்ட வந்த நிதி நிறுவன ஊழியர்கள்; ஆவேசமடைந்த மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

பல்லடம் அருகே, கடனை வசூலிக்க வந்த நிதிநிறுவன ஊழியர்கள் வீட்டுக்கு பூட்டு போட முயன்றதால் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-01 04:53 GMT

பல்லடம் அருகே, தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி. இவரது மனைவி வேலாத்தாள் (வயது 60). கருப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதற்கிடையே, வேலாத்தாள் திருப்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டின் பட்டாவை அடகு வைத்து, ஒரு லட்சத்து 25 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அதற்கு இதுவரை அவரது குடும்பத்தினர் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வரை பணத்தை திருப்பி செலுத்திருப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக வேலை ஏதும் இல்லாத காரணத்தால், தவணைத்தொகையை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், வேலாத்தாளின் வீட்டுக்கு வந்த நிதிநிறுவன ஊழியர்கள், கடன் தொகை செலுத்தவில்லை எனக் கூறி நோட்டீஸ் அளித்துள்ளனர். மேலும், நேற்று அந்த ஊழியர்கள் வீட்டிற்கு பூட்டு போட முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மூதாட்டி வேலாத்தாள், தங்களது வீட்டை ‘ஜப்தி’ செய்து விடுவார்களோ என்று மனவேதனை அடைந்தார்.  வேலாத்தாள், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் நிதி நிறுவன உழியர்களை சிறைபிடித்து, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் நிதி நிறுவன ஊழியர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி, தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் புகார்

இதுகுறித்து, பொதுமக்கள்  சிலர் கூறியதாவது,

நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் குடும்பத் தேவைகளுக்காக இவ்வாறு கடன் வாங்கி, தவணை முறையில் கட்டி வருகிறோம். இதில், மகளிர் குழு ஒன்று சேர்ந்து, நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி வார தவணையாகவோ, மாத தவணையாகவோ கடனை கட்டுகிறோம். ஆனால், சில வேளைகளில், வேலை இல்லாத நிலையில், கடனை திருப்பிச் செலுத்த முடியாத பட்சத்தில், நிதி நிறுவன ஊழியர்கள் சிலர், அடாவடியான செயல்களில் ஈடுபடுகின்றனர். 

பணம் கட்ட முடியாதவர்களின் வீடுகளுக்கு முன் வந்து சத்தமிடுவது, தகாத வார்த்தைகளில் பேசுவது, வீட்டுக்குள் வந்து மணிக்கணக்கில் அமர்ந்து கொண்டு செல்ல மறுப்பது, வீட்டில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை எடுத்துச் செல்ல முயற்சிப்பது, நகை உள்ளிட்ட பொருட்களை அடகு வைத்து பணம் கட்டுமாறு வலியுறுத்துவது என, அராஜமாக நடந்துகொள்வது வழக்கமாகி விட்டது. எனவே, இதுபோன்ற அடாவடி செயல்களை தடுக்கவும், அத்துமீறல், அராஜக செயல்களை ஒடுக்கவும் போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Similar News