கனிமவளம் கடத்தலை தடுக்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு
கனிமவளம் கடத்தலை தடுக்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.;
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
கனிமவளம் கடத்தலை தடுத்து நிறுத்தக்கோரி பல்லடத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கனிமவள பாதுகாப்பு, இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் தலைமையில் நடைபெற்றது அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கனிம வளங்களை கடத்தி எம். சாண்ட் ஜல்லிக்கற்க்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் என்ற பெயரில் கேரளா, கர்நாடகா, மற்றும் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. திருப்பூர், கோவை, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, என கனிம வளம் கடத்தப்படும் பகுதிகளின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. 20 டன்னுக்கு மேல் கிராமசாலைகளில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, ஆனால் மிகப்பெரிய கனரக வாகனங்களை பயன்படுத்தி,சுமார் 60 டன்னுக்கும் அதிகமாக கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதால், சாலைகள் சேதமடை கின்றன. மேலும் கனிம வளங்கள் எடுக்க அரசுக்கு வரி, ஜிஎஸ்டி, வருமானவரி, ராயல்டி உள்ளிட்ட எதுவும் செலுத்தப்படுவதில்லை. சட்டவிரோதமாக வெடி மருந்துகளையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில் பல்லடம் சுக்கம்பாளையத்தில் கடந்த சில தினங்களாக அளவுக்கு அதிகமான கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றது என்றார்.
பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் கனிம வள கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை மிரட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, வரும் மே 16ந்தேதி செவ்வாய்க்கிழமை பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திரு ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.