குண்டடம் அருகே டிராக்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
Tirupur News,Tirupur News Today- குண்டடம் அருகே, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிராக்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
Tirupur News,Tirupur News Today- தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் கடந்த 5 ம் தேதி முதல் நடந்து வருகிறது.
அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்துகள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கைபடி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 7 வது நாளாக நடந்து வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு டிராக்டர் உடன் வந்திருந்த விவசாயிகள் அதில் ஏறி நின்றபடியும், கீழே நின்றபடியும் விவசாய சங்கத்தின் கொடியை கையில் ஏந்தியபடி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராம பகுதியில் இருந்து விவசாயிகள் வந்து கலந்து கொண்டு தங்களது 10 அம்ச கோரிக்கையை தெரிவிக்கும் விதமாக போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தப் போராட்டத்தில் குண்டடம் ஒன்றியம் பெல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.