புதிய நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படுமா? குழப்பத்தில் கட்சிகள்

புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளுக்கு, தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம், அரசியல் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

Update: 2021-11-10 15:00 GMT

பைல் படம்.

புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளுக்கு, தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம், அரசியல் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில், 29 பேரூராட்சிகள், புதிய நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், திருமுருகன்பூண்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலை நடத்துவதற்கான பணியில் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்க்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பினர், இறுதி வாக்காளர் பட்டியலை வரும், 24ம் தேதிக்குள் நிறைவு செய்து, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நகராட்சிகளில் தேர்தல் நடத்த குறைந்தது. 21 வார்டுகள் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், திருமுருகன்பூண்டியில், 15 வார்டுகள் மட்டுமே உள்ளன. அதேபோன்று புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பல பேரூராட்சிகளில், வார்டுகளின் எண்ணிக்கை 20க்கும் குறைவாகவே உள்ளது.

எனவே, புதிய நகராட்சிகளில், ஆணையர் பணியிடம் நிரப்பப்பட்டு வார்டுகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட பிறகுதான், தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், தற்போதுள்ள நிலையிலேயே தேர்தல் நடத்தப்பட்டு, அதன்பிறகு நகராட்சி அந்தஸ்து நிலைபாடுக்கு அவை மாற்றப்படும் என்ற கருத்து, அரசியல் கட்சியினர் மத்தியில் உள்ளது.

Tags:    

Similar News