பல்லடம் நகராட்சியில் திமுக வேட்பாளர் மனு தள்ளுபடி
பல்லடம் நகராட்சியில், தி.மு.க., வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.;
பல்லடம் நகராட்சியில், தி.மு.க., வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 133 பேரின் வேட்புமனு மீதான பரிசீலனை, தேர்தல் நடத்தும் அலுவலர் விநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இதில், 15-வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க., வேட்பாளர் பழனிசாமி, கடந்த முறை துணைத்தலைவராக பதவி வகித்த போது தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை 15-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் அவரது வேட்பு மனு குறித்து ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் விநாயகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன், உள்ளிட்ட குழுவினர் அவரது மனுவை மீண்டும் பரிசீலனை செய்தபோது வேட்புமனுவில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அவர் குறிப்பிடவில்லை. இதனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தவிர 18 வார்டுகளில் போட்டியிட ஆண்கள் 66 பேரும், பெண்கள் 66 பேர் உள்ளிட்ட மற்ற 132 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தி.மு.க. வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது பல்லடம் தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.