பல்லடம்; மாணிக்காபுரத்தில் சாக்கடை கால்வாய் பிரச்னைக்குத் தீா்வு காண கோரிக்கை
Tirupur News-மாணிக்காபுரம் ஊராட்சி சி.எம்.நகரில் சாக்கடை கால்வாய் பிரச்னைக்குத் தீா்வு காண கோரிக்கை எழுந்துள்ளது.
Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகேயுள்ள மாணிக்காபுரம் ஊராட்சி சி.எம்.நகரில் நிலவும் சாக்கடை கால்வாய் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சி சி.எம்.நகரில் சாக்கடை கழிவு நீா் கால்வாய் மூலம் வெளியேற்ற முடியாமல் தேங்கிக் கிடப்பதால் அப்பகுதியில் கொசுக்கள்அதிகரித்து அடிக்கடி அப்பகுதி பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது.
இந்தக் கழிவுநீா்ப் பிரச்னைக்குத் தீா்வு காண வலியுறுத்தி அப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோா் மாணிக்காபுரம் ஊராட்சித் தலைவா் நந்தினி சண்முகசுந்தரம், பல்லடம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் மனோகரன் ஆகியோரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளா்ச்சி அலுவலா் உறுதி அளித்தாா்.
இதுகுறித்து மாணிக்காபுரம் ஊராட்சித் தலைவா் நந்தினி சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 15-ஆவது நிதிக்குழு மானிய நிதியில் சி.எம்.நகா் மேல்நிலைத் தொட்டி முதல் ஏசையன் வீடு வரை கழிவு நீா் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கழிவு நீரை வெளியேற்ற அருகில் உள்ள பல்லடம் நகராட்சிக்குச் சொந்தமான கால்வாயில் இணைப்பதற்கு நகராட்சி நிா்வாகம் ஆட்சேபணை தெரிவிப்பதால் தற்போது ஊராட்சிப் பகுதியில் கழிவுநீா் தேங்கி சாலையில் வழிந்தோடும் நிலை உள்ளது.
இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை உள்ளது. பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா். இதே நிலை நீடித்தால் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் பரவும் சூழ்நிலை ஏற்படும். எனவே கழிவு நீரை பல்லடம் நகராட்சிக்குச் சொந்தமான கழிவுநீா் வடிகாலில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.