பஞ்சு, நூல் விலையேற்றம்: சிறிய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடி
திருப்பூர் மாவட்டத்தில் பஞ்சு, நுால் விலையேற்றம் தொழில் துறையினர் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.;
பஞ்சு, நுால் விலையேற்றம் தொழில் துறையினர் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி, தொழில் துறையினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து, ஜவுளி உற்பத்தியாளர்கள் சிலர் இன்ஸ்டா நியூஸ் இணையதளத்திடம் கூறியதாவது:
கடந்த டிசம்பர் மாதத்துக்கு பின், நுால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கூடுதல் விலை கொடுத்தாலும், தமிழகத்தில், நுால் இல்லை என கூறுகின்றனர். நுால் ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாக, தட்டுப்பாடு ஏற்பட்டு அண்டை மாநிலங்களில் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உள்ளது. கொரோனா பாதிப்பு, அண்டை மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள், துணி விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி தொழில் நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
நுால் விலை தொடர்ந்து அதிகரித்த போதும், துணி விலை மீட்டருக்கு, ஐந்து ரூபாய் வரை குறைந்துள்ளது. இதற்கிடையே, கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பஞ்சு இறக்குமதி வரி, 11 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும், நுால் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தியும், அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறிய அளவில் தொழில் செய்து வரும் பலர், காணாமல் போகும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.