பல்லடம் அருகே வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள்
Tirupur News- பல்லடம் அருகே நீர் வழித்தடத்தை குப்பைக்கூடாரமாக மாற்றியதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் வாகனங்களை சிறைபிடித்தனர்.
Tirupur News,Tirupur News Today -பல்லடம் அருகே ஒரு ஊராட்சியில் நீர்வழித்தடத்தில் மற்றொரு ஊராட்சியில் இருந்து கொண்டுவரப்பட்ட குப்பைகள் குழி தோண்டி கொட்டி மூடப்பட்டுள்ளன. இதையறிந்த பொதுமக்கள், வாகனங்களைச் சிறைபிடித்தனர்.
பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, காளிவேலம்பட்டி -- வேலம்பாளையம் செல்லும் ரோட்டில், அகழ் இயந்திர உதவியுடன், அங்குள்ள நீர் வழித்தடத்தில் குழி தோண்டப்பட்டுள்ளது. இரண்டு டிராக்டர்களில் கொண்டுவரப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு குழி மூடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த அப்பகுதி விவசாயிகள், வாகனங்களை சிறைபிடித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது,
அருகில் உள்ள மாணிக்காபுரம் ஊராட்சியில் இருந்து நான்கு டிராக்டர்களில் குப்பைகள் எடுத்துவரப்பட்டு, சுக்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள நீர்வழித்தடத்தில் கொட்டி மூடப்பட்டு வந்தது. அடிக்கடி இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்து வருகின்றன. வழிநெடுக குப்பைகளை சிதற விட்டபடி குப்பைகள் இங்கு கொண்டுவரப்பட்டதால், துர்நாற்றம் வீசி வருகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, மழைநீர் சேகரிப்பு ஆதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என, கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இதைப் பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடுவது கவலை அளிக்கிறது. ஊராட்சிகளின் குப்பைகளை அந்தந்த ஊராட்சிகளுக்கு உள்ளேயே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
நெடுஞ்சாலையில் கழிவுநீர்
பல்லடம் - மங்கலம் ரோட்டில், நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல ரோட்டோரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
மங்கலம் ரோடு, வேளாண் விற்பனை கூடம் வரை செல்லும் கழிவுநீர் கால்வாய், 'டிஸ்போஸல் பாயின்ட்' இல்லாமல், இங்கேயே நிறைவடைகிறது. எனவே, அவ்வப்போது கழிவுநீர் நிரம்பி வழிந்து ரோட்டுக்கு வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது. கழிவு நீர் நிரம்பி வழியாமல் இருக்க, தினசரி லாரி மூலம் கழிவு நீர் உறிஞ்சி எடுத்து அகற்றப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கடந்த சில தினங்களாக, மீண்டும் ரோட்டில் கழிவு நீர் வழிந்தோடி வருகிறது. வேளாண் விற்பனை கூடம் அருகே, தேங்கி நிற்கும் கழிவு நீர் நிரம்பி வழிந்து, நெடுஞ்சாலையில் கழிவு நீர் ஆறு உருவாகியுள்ளது.
வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது கழிவுநீர் தெறிக்கிறது. மேலும், தேங்கி நிற்கும் கழிவு நீரில் இருந்து விலகி செல்ல வேண்டி, பாதசாரிகள் நடு ரோட்டிலேயே ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர்.
வேளாண் விற்பனை கூடம் அருகே, தேங்கி நிற்கும் கழிவுநீரில், ஆயிரக்கணக்கில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. நீண்ட காலமாக உள்ள இப்ப பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்தி வருகிறது.
முன்னதாக, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அறிந்து, மேலும் குப்பைகளுடன் வந்த டிராக்டர்கள் திரும்பி சென்றன. இதையடுத்து, வி.ஏ.ஓ.,வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.