சபரிமலை சீசன் எதிரொலி; பல்லடத்தில் கறிக்கோழி விலை வீழ்ச்சி

Tirupur News- சபரிமலை சீசன் துவங்கியதால், பல்லடத்தில் கறிக்கோழி விலை சரிவடைந்துள்ளது.;

Update: 2023-11-23 13:43 GMT
Tirupur News- பல்லடத்தில் கறிக்கோழி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

கறிக்கோழி நுகர்வை பொருத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். இந்த நிலையில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதாலும், சபரிமலை சீசன் காரணமாக கறிக்கோழி நுகர்வு குறைவினாலும் கறிக்கோழி கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் கறிக்கோழி கொள்முதல் விலை 100 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று 72 ரூபாயாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல், ரூ.90 வரை செலவாகும் நிலையில், இந்த விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சபரிமலை சீசன் துவங்கி விட்டால், கறிக்கோழி விலையில் சரிவு ஏற்படுகிறது. அதே போல், புரட்டாசி மாதத்திலும், அசைவம் விரும்புவோர் அந்த மாதத்தில் விரதம் இருப்பதால், அப்போதும் கறிக்கோழி விலையில் வீழ்ச்சி ஏற்படும். இதுபோன்ற நேரங்களில், கறிக்கோழி நுகர்வு வெகுவாக குறைந்து விடுவதால் உற்பத்தியை குறைப்பது பண்ணையாளர்களின் வழக்கமாக உள்ளது. எனவே வரும் நாட்களில், கறிக்கோழி விற்பனையை பொறுத்து உற்பத்தியை குறைக்கவோ, கூடுதலாக்கவோ கறிக்கோழி உற்பத்தி பண்ணையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News