அருள்புரம்- உப்பிலிபாளையம் ரோட்டை புதுப்பிக்க கலெக்டரிடம் கோரிக்கை
Tirupur News- பல்லடம் அருகே உள்ள அருள்புரம்- உப்பிலிபாளையம் ரோடு பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம்- உப்பிலிபாளையம் ரோடு பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைக்க கோரி பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் முருகதாஸ், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அருள்புரம் பூக்கடை முதல் உப்பிலி பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வரை உள்ள தார் சாலை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்தும், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையை நம்பி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பயணித்து வருகிறார்கள்.
இந்த சாலை வழியாக முக்கிய தொழிற்சாலைகள் , அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் சட்ட கல்லூரி, உப்பிலிபாளையம் அரசு சுகாதார நிலையம் போன்றவைகள் உள்ளது. அருள்புரம் பகுதி வளர்ந்து வரும் தொழில் நகரமாக இருப்பதால் இந்த சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும்.
எனவே இந்த சாலையை விரிவுப்படுத்தி அருள்புரம் தொடங்கி உப்பிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 12 அடி சாலையை 16 அடியிருந்து 20 அடிவரை அகலப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைக்க வேண்டும். எனவே மாவட்ட கலெக்டர் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு இட வேண்டும் என்று கேட்டு மனு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.