அத்திக்கடவு திட்டம் தோல்வியடையும்? கள் இயக்கம் நல்லசாமி கணிப்பு
‘அத்திக்கடவு – அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், எதிர்பார்த்த பலன் தராது’ என, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.;
'அத்திக்கடவு – அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், எதிர்பார்த்த பலன் தராது' என, கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும், தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் செயலாளருமான நல்லசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:
தமிழகத்தில் காவிரி தீர்ப்பு, நீர்பாசன நிர்வாகம் தொடர்பான அரசாணை மற்றும் விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதில்லை. நீர் நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது. இதற்கு உதாரணமாக, பழைய பவானி ஆற்றுநீர் பாசனங்களை குறிப்பிடலாம். அந்த பாசனங்களில் இருந்து, ஆண்டுக்கு, 8.13 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட வேண்டும். ஆனால், 24 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அதன் வழித்தடத்தில் உள்ள சாய ஆலைகள், தோல் ஆலைகள் தான், இந்த தண்ணீரை பெருமளவில் பயன்படுத்துகின்றன. இதுபோன்ற முறையற்ற நீர் நிர்வாகத்தால், கடந்த, 1956 முதல் தற்போது வரை, 16 போகம் நிலக்கடலை சாகுபடியும், 8 போகம் நெல் சாகுபடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாண்டியாறு – மாயாறு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், வீணாக கடலில் கலக்கும், 14 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு பெற முடியும்.
அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணியில், முந்தைய ஆட்சியின் போது இருந்த வேகம் இல்லை. இந்த திட்டத்தின் மூலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள, 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டல் செய்வதாக சொல்கின்றனர். பழைய பவானி பாசனத்தில் இருந்தே, முறையான நீர் நிர்வாகம் செய்ய தவறிய அரசு, மூன்று மாவட்டங்களின் நீர் தேவையை இந்த திட்டம் மூலம், சரியாக செயல்படுத்துமா என்பது கேள்விக்குறி. எந்த பகுதியில் இருந்து அதிக ஆதாயம் கிடைக்கிறதோ, அந்த பகுதிக்கு தான், அதிகளவில் நீர் செறிவூட்டலுக்காக தண்ணீரை திறந்துவிடும் நிலை வரும். எனவே, சரியான திட்டமிடல் மற்றும் நீர் நிர்வாகத்தை பின்பற்றினால் மட்டும் திட்டத்தின் பலன் முழுமையாக கிடைக்கும். இவ்வாறு, நல்லசாமி கூறியுள்ளார்