2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால சின்னங்கள்; திருப்பூரில் கண்டுபிடிப்பு
Tirupur News,Tirupur News Today- 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால சின்னங்கள், திருப்பூரில் கிடைத்துள்ளன.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூரை அடுத்த காவுத்தம்பாளையம் அருகில் உள்ள குமரிக்கல்பாளையத்தில் உயா்மின் கோபுரத்துக்கான துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் கடந்த 47 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், இப்பகுதியில் நடுகல் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்கள் இருப்பதால் அகழாய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில் திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை பட்டயப் படிப்பின் பொறுப்பாசிரியா் ரவி தலைமையில் தொல்லியல் ஆய்வாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
இதுகுறித்து, பேராசிரியா் ரவி கூறியதாவது,
குமரிக்கல்பாளையத்தில் இருந்து வடமேற்குப் பகுதியில் 2 கிலோ மீட்டா் சுற்றளவில் சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இங்குள்ள 45 அடி உயரமான நடுகல் வீரக்கல் என்று அழைக்கப்படுகிறது. இந்தக்கல்லில் இருந்து வடமேற்கு திசையில் ஒரு கிலோ மீட்டா் தொலைவில் 10க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இந்த கல்வட்டங்கள் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மனிதா்கள் இறந்த பிறகு அவா்களுக்காக எடுக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாகும்.
இங்கு கிடைத்துள்ள பொருட்களை பாா்க்கும் போது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கருப்பு, சிவப்பு மட்கல பண்பாட்டை கொண்ட மக்கள் வாழ்ந்து இருப்பதை அறிய முடிகிறது. இங்கு பெரிய இரும்புக் கசடுகள் கிடைத்ததன் மூலம் இங்கிருந்த மக்கள் இரும்புக் கருவிகள், போா்க்கருவிகள், உழவுக்கருவிகள் ஆகியவற்றை செய்து பயன்படுத்தியதாக தெரிகிறது.
மேலும் கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட மட்கலங்களும், தடித்த ஓடுகள் உடைய முதுமக்கள் தாழிகளும் ஏராளமாக கிடைக்கின்றன. இவை சங்க காலத்திற்கு முற்பட்ட மக்கள் வாழ்ந்ததற்கான உறுதியான சான்றுகளாகும். சில மட்கல ஓடுகளில் குறியீடுகளும் கிடைத்திருக்கின்றன.
இறந்தவா்களை அடக்கம் செய்கின்ற முதுமக்கள் தாழிகளும், சிதைந்த பகுதிகளும் ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன. இதன் மூலம் இறந்தவா்களை அடக்கம் செய்கின்ற உன்னத கலையை கற்றிருந்ததையும் உணர முடிகிறது.
எனவே, இந்தப்பகுதியை அகழாய்வு செய்வதன் மூலம் தமிழகத்தின் பண்டைய வரலாற்றையும், கொங்கு நாட்டின் உன்னதப்பண்பாட்டு சிறப்பு மிக்க வரலாற்றையும் மீட்டெடுக்க முடியும், என்றாா்.