பள்ளிகளில் சுய மதிப்பீட்டு பணியை வரும் 30ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு
Tirupur News- பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீடு குறித்த பணிகளை வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.;
Tirupur News,Tirupur News Today- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த மத்திய கல்வி அமைச்சகத்தின், தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக மையம் (என்.ஐ.இ.பி.ஏ.,) ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீடு குறித்து ஆய்வு செய்கிறது.
2017 முதல் ஆண்டுதோறும் மதிப்பீட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஒவ்வொரு பள்ளி நிர்வாகங்களும், அடிப்படை வசதி குறித்து தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பாக இது அமைகிறது. நடப்பாண்டுக்கான சுயமதிப்பீட்டு பணிகளை ஒவ்வொரு பள்ளிகளும் துவங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாநில திட்ட இயக்குனரிடம் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதில் பள்ளியில் உள்ள வகுப்பறை, நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், கம்ப்யூட்டர், மின்சார வசதி, மதிய உணவு பொருட்கள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்டவை குறித்து இம்மாதம் 30-ந் தேதிக்குள் சுயமதிப்பீடு செய்ய வேண்டும். மேலாண்மை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து வட்டார அளவிலான கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் குழு மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது. அதற்கேற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளிகளை தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.