ஊத்துக்குளி அருகே, தீப்பற்றி எரிந்த லாரியால் பரபரப்பு
Tirupur News,Tirupur News Today- ஊத்துக்குளி - செங்கப்பள்ளி பிரிவு பகுதியில், பஞ்சு மூட்டைகளை ஏற்றிவந்த லாரி, தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
Tirupur News,Tirupur News Today- ஹரியானாவில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றி க்கொண்டு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி செங்கப்பள்ளியை நோக்கி இன்று காலை கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது.
ஊத்துக்குளி-செங்கப்பள்ளி பிரிவு அருகே செல்லும் போது திடீரென லாரியில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனே டிரைவர் கீழே இறங்கி பார்ப்பதற்குள் லாரியில் இருந்த பஞ்சு மூட்டைகளில் தீ பற்றி எரிந்தது. மூட்டைகளில் பஞ்சு இருந்ததால் தீ கொழுந்து விட்டு வேகமாக எரிந்தது. உடனே இது குறித்து ஊத்துக்குளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் தீயில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமானது.
லாரியின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீயால் இந்த விபத்து நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் பாய்லர் வெடித்து தீ விபத்து
திருப்பூர் மங்கலம் ரோட்டில் குளத்துப்புதூர் பகுதியில் தனியார் சாய ஆலை உள்ளது. இங்கு பனியன் துணிகளுக்கு சாயமேற்றி கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை தொழிலாளர்கள் பணியில், வழக்கம்போல் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனே தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை முற்றிலும் அணைக்க முடியவில்லை. இதையடுத்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
தீ விபத்தில் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. இதனால், புகை மூட்டத்தால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.