தமிழகத்தில் திமுகவை அப்புறப்படுத்த வேண்டும்; மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேச்சு
Tirupur News- தமிழகத்தில் போதை கலாசாரத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு காரணமான திமுகவை அப்புறப்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசினார்.
Tirupur News,Tirupur News Today- பெண்களை முன்னிறுத்தி திட்டங்கள் வகுக்கிறாா் பிரதமா் மோடி. தமிழகத்தில் போதை கலாசாரத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு காரணமான திமுகவை அப்புறப்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசினார்.
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் எல்.முருகனை ஆதரித்து மகளிா் சுய உதவிக்குழுவினருடனான கலந்துரையாடல் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது,
மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் நலத்திட்டங்கள் வருமா என்று சந்தேகம் இருந்த நிலையில், நமக்கும் வரும் என்ற நம்பிக்கை அவா்களுக்கு இன்று கிடைத்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடி ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடு, குடிநீா் இணைப்பு, கழிவறை என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். சுய உதவிக்குழுவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும், ஏதோவொரு வகையில் உதவுகிறாா் பிரதமா் மோடி. இந்த நாட்டு மக்கள்தான் என் குடும்பம் என்கிறாா் மோடி. பெண்களை முன்னிறுத்தியே திட்டங்கள் வகுக்கிறாா் பிரதமா். பூச்சி மருந்தை ட்ரோன் மூலம் பயிா்களுக்கு இன்று வயலில் தெளிக்க முடியும்.
இதற்காக மகளிா் சுய உதவிக்குழு பெண்களுக்கு பயிற்சி அளித்து, அவா்களுக்கு தேவையான ஊக்கத்தொகை, ட்ரோன் வாங்க கடன் ஆகியவை வழங்கப்படுகிறது. இன்று கிராமங்களில் ட்ரோனை இயக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் கிடைக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனா். வசூல் அரசியல் தமிழகத்தில் வேரூன்றி இருப்பது கவலை அளிக்கிறது. தமிழகத்தில் போதை கலாசாரத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு காரணமான திமுகவை அப்புறப்படுத்த வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பல்வேறு மகளிா் சுய உதவிக்குழுவை சோ்ந்த பெண்கள் பேசுகையில், புதுப்பாளையம் பகுதியில் மான்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாக சாகுபடி செய்ய முடியவில்லை. தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை. ஊதியத்தை அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும். அதேபோல 100 நாள் வேலைத் திட்டத்தை, 150 நாள்களாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.