குறைந்தது அமராவதி அணை நீர்மட்டம்; ஏமாற்றத்தில் விவசாயிகள்
Tirupur News,Tirupur News Today- உடுமலை, அமராவதி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால், பாசனத்துக்காக தண்ணீர் திறப்பை எதிர்பார்த்த விவசாயிகள், பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.;
Tirupur News,Tirupur News Today- உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.இதில் பழைய ஆயக்கட்டு பாசனம் கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த ஜூன் முதல் நீர் வழங்கப்படுகிறது.
அமராவதி அணை 4 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டதாகவும், தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழைகள் என ஆண்டுக்கு 10 டி.எம்.சி., நீர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.நடப்பாண்டு அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை தீவிரமடையவில்லை. பருவ மழை ஏமாற்றி வரும் நிலையில், அணைக்கு நீர்வரத்து இல்லை.கடந்த ஆண்டு ஜூலை 15ல் அணை நிரம்பி 8 மாதம் வரை ததும்பிய நிலையில் காணப்பட்டது. நடப்பாண்டு கடும் வறட்சி நிலை காணப்படுகிறது.
இதனால் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நடப்பாண்டு பாசனத்திற்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு இரு முறை உயிர்த்தண்ணீர் வழங்கப்பட்டது.
கடந்த 8 -ம் தேதி திறக்கப்பட்டு 10 நாட்கள் நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது. அதே போல் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலூகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களும் பயன்பெற்று வருகின்றன. நடப்பாண்டு 10 நாட்கள் மட்டும் உயிர்த்தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலங்களுக்கு வழக்கமாக ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் பாசனம் துவக்கப்பட்டு ஜனவரி வரை நீர் வழங்கப்படும். நடப்பாண்டு அணை நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளதால் கரூர் வரை உள்ள வலது கரை கால்வாய் பழைய ஆயக்கட்டு பாசன நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நடப்பாண்டு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் 8 ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு, இரண்டாம் போகம் சம்பா சாகுபடிக்கும் நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்து நீர்வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் வறட்சி ஏற்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே பாசனத்திற்கு நீர் திறக்க முடியும், என்றனர்.
அமராவதி அணையில் தற்போதையை நிலவரப்படி, மொத்தமுள்ள 90 அடியில் 56.66 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கன அடியில், 1,528.66 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து 740 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில், அமராவதி அணை நீர்மட்டம் 87.9 அடியாகவும், நீர்இருப்பு 3,857 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. நடப்பாண்டு நீர்இருப்பு பெருமளவு குறைந்து காணப்படுகிறது.
இதனால், பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள், பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.