திருப்பூரில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் மில்கள் ‘ஸ்டிரைக்’

Tirupur News,Tirupur News Today- திருப்பூர், மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கழிவுப்பஞ்சு விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி, ஓ.இ.நூல் மில்கள். ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன.;

Update: 2023-07-06 09:48 GMT

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில், ஓ.இ.நூல் மில்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், மங்கலம் மற்றும் கோவை மாவட்டத்தில் சோமனூர் பகுதிகளிலும் ஏராளமான ஓ.இ. நூல்மில்கள் உள்ளன. கழிவுப்பஞ்சு விலை உயர்வால், உற்பத்தி செய்யப்படும் ஓ.இ.நூலுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் நேற்று முதல் உற்பத்தி நிறுத்தம் தொடங்கப்படும் என சோமனூர், மங்கலம் சுற்றுவட்டார ஓ.இ.நூல் மில் உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று காலை 8 மணி முதல் மங்கலம், சோமனூர் சுற்று வட்டார ஓ.இ. நூல்மில் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர்.  இதைத்தொடர்ந்து மங்கலத்தில் உள்ள மேற்கு ரோட்டரி மகாலில் நேற்று காலை 10 மணிக்கு ஓ.இ.நூல்மில் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஓ.இ.நூல்மில் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் நிருபர்களிடம் கூறியதாவது,

ஓ.இ. ஸ்பின்னிங் மில்லில் கழிவுபஞ்சில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஓ.இ. நூல்கள் கைத்தறி, விசைத்தறிகளுக்கு கொடுத்து வருகிறோம். கடந்த ஒரு ஆண்டு காலமாக பருத்தி விலை உயர்வினால் கழிவுபஞ்சு விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலைக்கு இணையாக ஓ.இ. நூல் உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை. சமீப காலமாக பருத்தி விலை குறைந்தாலும் கழிவுபஞ்சு விலை குறையவில்லை.

சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளது. ஆகவே கழிவுபஞ்சு விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றால் ஓ.இ. நூல்மில்லை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கிரே ஓ.இ. நூல் உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளோம். வருகிற 10-ம் தேதிக்கு மேல் கலர் ஓ.இ.நூல் உற்பத்தி நிறுத்தம் குறித்து கூட்டுக்கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவெடுப்போம். கழிவுப்பஞ்சு விலை குறையாமல், மின் கட்டண உயர்வு குறையாமல் ஓ.இ. நூல் மில்களை இயக்க முடியாது. மத்திய அரசும், மாநில அரசும் எங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் ஓ.இ.நூல் உற்பத்தி நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 4 லட்சம் முதல் 4.5 லட்சம் கிலோ ஓ.இ. நூல் உற்பத்தி செய்கிறோம். ஒரு கிலோ ஓ.இ.நூல் 160 முதல் அதிகபட்சம் ரூ.200 வரை விற்பனை செய்கிறோம்.அதற்குரிய ஜி.எஸ்.டி முறையாக செலுத்தி வருகிறோம்.

ஆகவே தமிழக அரசு கழிவுபஞ்சுவிலை உயர்வையும், மின்கட்டண உயர்வையும் குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News