திருப்பூர் மாவட்டம்; வரும் 6ம் தேதி முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் வரும் 6ம் தேதி முதல், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நவம்பா் 6-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.
இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின்கீழ் 2023 -ம் ஆண்டுக்கான 4 -வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி வரும் திங்கள்கிழமை தொடங்கி 21 நாள்கள் நடக்க உள்ளது.
கோமாரி நோயானது கலப்பின மாடுகளை அதிக அளவில் தாக்குகிறது. இதனால், கால்நடை வளா்ப்பவா்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயால், கறவை மாட்டில் பால் உற்பத்தி குறைவதுடன், சினை பிடிப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது. மேலும், எருதுகளின் வேலைத்திறன் குறைகிறது. இளங்கன்றுகளில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், கோமாரி நோய் பரவலைக் கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 6 மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து கால்நடைகளுக்கும் (பசுவினம் மற்றும் எருமையினம்) கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அதன்படி, 2023 -ம் ஆண்டுக்கான 4 -வது சுற்று தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில், கிராமங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும், கால்நடை நிலையங்கள் மூலமாக இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
எனவே, கால்நடை வளா்ப்பவா்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி கோமாரி நோய் வராமல் தடுக்கும் விதமாக, கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.