உடுமலை அருகே சூறாவளிக் காற்றுடன் மழை; மின் கம்பங்கள் உடைந்ததால் இருளில் சிக்கிய கிராமங்கள்
Tirupur News,Tirupur News Today- உடுமலை அருகே சூறாவளிக் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் தென்னை, வாழை உள்ளிட்ட மரங்கள் சாய்ந்துள்ளது. மின் கம்பங்கள் உடைந்ததால் கிராமங்கள் இருளில் மூழ்கின.;
Tirupur News,Tirupur News Today- உடுமலை அருகே சூறாவளிக் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் தென்னை, வாழை உள்ளிட்ட மரங்கள் சாய்ந்துள்ளது. மின் கம்பங்கள் உடைந்ததால் கிராமங்கள் இருளில் மூழ்கின.
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. ஆனால் மாலையில் திடீரென பருவநிலையில் மாறுதல் ஏற்பட்டு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் திடீரென பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த சூறாவளிக் காற்றால் சாமராயப்பட்டி, பாப்பான்குளம், சாளரப்பட்டி, ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. பாப்பான்குளம் பிரிவு பகுதியில் செயல்பட்டு வந்த கோழிப்பண்ணை காற்றின் வேகத்தால் பலத்த சேதமடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் உயிரிழந்தன.
மேலும் சாமராயப்பட்டியைச் சேர்ந்த விவசாயி நந்தகோபால் என்பவரின் தோட்டத்தில் காய்த்துக் கொண்டிருந்த 18 தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் சுரேஷ் என்ற விவசாயி தோட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் ஒரு தென்னை மரம் சேதமானது. சாளரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி தோட்டத்தில் 2 ஏக்கர் வாழைமரங்கள் சேதமடைந்துள்ளது. இதுபோல் பல விவசாயிகளின் தோட்டத்தில் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சேதமடைந்தது. கோழிப்பண்ணை மேற்கூரை சரிந்ததால் 6500 கோழிக்குஞ்சுகள் உயிரிழந்தன.
மேலும் ஆலங்கட்டி மழையால் தக்காளி, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிப் பயிர்களும் சேதமடைந்துள்ளன. எனவே வேளாண்மைத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் முழுமையாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாமராயப்பட்டி பகுதியில் பழனி ரோட்டில் சாலையோர மரங்கள் பல சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. அத்துடன் ரெட்டிபாளையம், பாப்பான்குளம், சாமராயப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் காற்றின் வேகத்தால் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. 20 நிமிடங்கள் காற்று ஆடிய ருத்ர தாண்டவத்தால் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது.
அக்னி வெயில் கொளுத்தும் காலத்தில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்த சம்பவம் மடத்துக்குளம் பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.அதேநேரத்தில் மரங்கள் சாய்ந்து, மின் கம்பங்கள் விழுந்து பல வகைகளில் சேதம் ஏற்பட்ட போதும் உயிரிழப்பு ஏற்படாதது ஆறுதலளிப்பதாக உள்ளது. பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளதால் முழுமையான சேதம் குறித்த விவரங்கள் நாளை (வியாழக்கிழமை) அதிகாரிகளின் ஆய்வின் மூலமாகவே தெரிய வரும்.