கொளுத்தும் வெயிலில், வற்றாத கொழுமம் குளம்; விவசாயிகள் மகிழ்ச்சி
Tirupur News,Tirupur News Today- மடத்துக்குளம் பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சியிலும், வெப்பத்திலும் கொழுமம் குளத்தில் நீர் நிறைந்து காணப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
Tirupur News,Tirupur News Today- மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆனால், தென்மேற்குப் பருவமழை கைகொடுக்காததால் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பெரும்பாலான குளங்கள் தண்ணீரில்லாமல் வறண்டு கிடக்கிறது. இதன் காரணமாக பாசன நீருக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கொழுமம் பகுதியிலுள்ள குளத்தில் நீர் நிறைந்து காணப்படுவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. அத்துடன் இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயமாகவும் உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது,
பருவமழை கைகொடுக்காத நிலையில், பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. பல இடங்களில் 600 அடிக்கு மேல் ஆழ்துளைக்கிணறு அமைத்து நீரை உறிஞ்சும் நிலை உள்ளது. மழைப்பொழிவு குறைவால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் மேலும் மேலும் ஆழம் தோண்டி பெருமளவு செலவு செய்தும், பயனில்லாமல் போகும் நிலை உள்ளது.
அதே வேளையில் கொழுமம் பகுதி குளத்துக்கு திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள குதிரையாறு அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. மேலும் வறண்ட வானிலை நிலவும் சூழலிலும் இந்த பகுதியில் நீர் இருப்பால் காற்றில் குளிர்ச்சி உள்ளது. இது பயிர்களுக்கு சாதகமான பருவநிலையை உருவாக்குவதால் மகசூல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பயிர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் குளத்து நீர் இருப்பு உதவிகரமாக இருக்கும்.மொத்தத்தில் இந்த நீர் இருப்பு விவசாயிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது, என்று விவசாயிகள் கூறினர்.