மடத்துக்குளம்; தக்காளி சாகுபடியை அதிகரிக்க தோட்டக்கலை துறை யோசனை
Tirupur News- மடத்துக்குளம் பகுதியில், தக்காளி சாகுபடியை அதிகரிக்க, தோட்டக்லை துறை ஆலோசனை வழங்கியுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- மடத்துக்குளம் தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்களான காய்கறிகள் பெரும்பாலான விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தக்காளி சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நல்ல வடிகால் வசதியான இருமண்பாட்டு நிலம் தக்காளி சாகுபடி செய்வதற்கு உகந்த நிலமாகும். விதைகள் மிக சிறியதாக இருப்பதால் நாற்று விட்டு நடவு செய்யப்படுகிறது.
ஒரு ஏக்கரில் நாற்று விட்டு நடவு செய்ய 160 கிராம் விதைகள் தேவைப்படும். விவசாயிகளே தங்கள் சொந்த நிலங்களில் மேட்டுப்பாத்தி அமைத்து விதைகளை நடவு செய்து நாற்றுக்களை தயார் செய்யலாம். ஆனால் பெரும்பாலான விவசாயிகள் நாற்றுப் பண்ணைகளில் குழித்தட்டு நாற்றுகள் வாங்கி நடவு செய்து வருகின்றனர். அவ்வாறு வாங்கும் போது தரமான நாற்றுகளாக விவசாயிகள் தேர்வு செய்து வாங்க வேண்டும்.
நடவு செய்யும் நிலத்தை 3 அல்லது 4 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது ஏக்கருக்கு 8 முதல் 10 டன் மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இட்டு மண்ணுடன் கலக்க செய்ய வேண்டும்.
பின்பு 60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்து வசதியான அளவில் வாய்க்கால் வரப்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நடவு செய்த 3-ம் நாள் உயிர் தண்ணீர் விட வேண்டும். அதனை தொடர்ந்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதும்.நடவு செய்த 30 முதல் 35 நாட்களில் களையெடுத்து, பின் மேலுரம் இட்டு மண் அணைக்க வேண்டும்.
தேவைக்கேற்ப இயற்கை அல்லது செயற்கை உரங்களை பயன்படுத்தவும். தகுந்த பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். தக்காளி செடியில் இருக்கும் போதே செங்காய் பதத்தில் பறிக்கப்பட்டு கூடைகளில் அடுக்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்ய நன்கு பழுத்த பின் அறுவடை செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.