தளி பேரூராட்சியில் ரூ.2.17 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணி துவக்கம்
Tirupur News-குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தளி பேரூராட்சியில் ரூ.2.17 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.;
Tirupur News,Tirupur News Today- குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தளி பேரூராட்சியில் ரூ.2.17 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தளி பேரூராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் புதிய மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன் தலைமை வகித்தாா். அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று புதிய, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது,
மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிா், உயா்கல்வி பயிலும் மாணவிகள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்து வருகின்றனா்.
மகளிா் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அணிக்கடவு ஊராட்சி, நால்ரோட்டில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம், ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.24.40 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
புக்குளம் ஊராட்சியில் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்துவைத்தாா். மேலும், தளி பேரூராட்சியில் நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.82.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைத்தல், மாநில நிதிக்குழு திட்டத்தின்கீழ் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைத்தல் என மொத்தம் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் புதிய மற்றும் முடிவுற்ற பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி 4-வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சுகந்தி முரளி, குடிமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகேந்திரன், செந்தில்கணேஷ்மாலா, தளி பேரூராட்சித் தலைவா் உதயகுமாா், பேரூராட்சி செயல் அலுவலா் கல்பனா, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் புஷ்பராஜ், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.