மடத்துக்குளம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் தென்னை நார் பொருட்கள், தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 1.50 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் தென்னை நார் பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தேங்காய் மட்டைகளிலிருந்து தென்னை நார் மற்றும் பித்துக்கட்டி உற்பத்தி செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சமீப காலமாக ஏற்றுமதி வாய்ப்புகள் குறைந்த நிலையில், பல தென்னை நார் தொழிற்சாலைகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விற்பனை வாய்ப்புகளை எதிர்பார்த்து, உற்பத்தி செய்த தென்னை நார்களை இருப்பு வைத்து காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
மடத்துக்குளம் அருகே சங்கரமநல்லூர் பேரூராட்சி குப்பம்பாளையத்தில், செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இங்கு நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சி பலனளிக்காத நிலையில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதியில் ‘மளமள’ வென தீ பரவிய நிலையில், காய வைக்கப்பட்டு இருந்த தேங்காய் மஞ்சிகள், தேங்காய் மட்டைகள், குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சி பண்டல்கள், மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமானது.
தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்ததும் உடுமலை மற்றும் பழனி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் விரைந்து, தீ விபத்து பகுதிக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆடி மாதம் என்பதால், அப்பகுதியில் பலமாக காற்று வீசியதால், தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறினர்
தென்னை நார் தொழிற்சாலை முழுவதுமாக தீ பரவியதால், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் தென்னை நார் பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகி உள்ளதாக, கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக, அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இந்த தீவிபத்து குறித்து, குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.