திருப்பூரில் நாளை (23ம் தேதி) மானியத்துடன் கடன்திட்ட முகாம்

Tirupur News-திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோா் பயன்பெறும் வகையில் மானியத்துடன் கடன் திட்ட முகாம் நாளை, 23ம் தேதி நடக்கிறது.

Update: 2024-02-22 07:59 GMT

Tirupur News- நாளை (23ம் தேதி) மானியத்துடன் கடன்திட்ட முகாம், திருப்பூரில் நடக்கிறது (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today-திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோா் பயன்பெறும் வகையில் மானியத்துடன் கூடிய கடன் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 23) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்  கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோா் பயன்பெறும் வகையில் மானியத்துடன இணைந்த கடன் திட்டங்களுக்கான முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நாளை ( வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.

புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) மூலம் ரூ. 5 கோடி வரை சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்கப்படும். மேலும், 25 சதவீத முதலீட்டு மானியம் மற்றும் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 25 சதவீத மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற எட்டாம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் சேவை தொழில்களுக்கு ரூ.20 லட்சம் கடனுதவியும், உற்பத்தி தொழில்களுக்கு ரூ. 50 லட்சம் கடனுதவியும் வழங்கப்படும். நகா்ப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியமும், கிராமப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்கு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சாா்ந்த தொழில் திட்டங்களுக்கு 35 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். மேலும், 6 சதவீத வட்டி மானியமும் கிடைக்கும். பிரதமரின் உணவு தயாரித்தல், பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டத்தில் தொழில்முனைவோருக்கு 25 சதவீத மானியத்துடன் ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கப்படும்.

எனவே, புதிதாக தொழில் தொடங்க கடனுதவி பெற விரும்பும் தொழில்முனைவோா், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், தொழில் விரிவாக்கம் செய்ய விரும்புவோா் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News