கேரளாவில் கோமாரி நோய்; எல்லை மாவட்டங்களில் கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை

Tirupur News,Tirupur News Today- கேரளாவில், கால்நடைகளை கோமாரி நோய் தாக்கி வருவதால், தமிழக - கேரள எல்லை மாவட்ட பகுதிகளில், கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.;

Update: 2023-08-06 07:35 GMT

Tirupur News,Tirupur News Today- கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- கோமாரி என்பது கால்நடைகளைக் கொல்லும் மிகக் கொடூரமான தொற்றுநோய். கால் குளம்பு பிளவுபட்ட வகையைச் சேர்ந்த விலங்குகளான மாடுகள், ஆடுகள், பன்றிகள் போன்றவை இந்த நோயால் பாதிக்கப்படும். ‘ஆப்தோவைரஸ்’ என்ற வகையைச் சேர்ந்த வைரஸ் தாக்குவதால் ஏற்படும் இந்த நோயால் பெரும்பாலும் மாடுகளே பாதிக்கப்படுகின்றன.

இந்த நோயால் பாதிக்கப்படும் மாடுகளுக்கு வாய், கால் குளம்பு, மடிகளில் புண் ஏற்படும். வாயிலிருந்து தொடர்ச்சியாக எச்சில் ஒழுகிக்கொண்டே இருக்கும். அதிகக் காய்ச்சல் இருப்பதோடு, மாடுகள் உணவு உண்ணாது. கறவை மாடுகளில் பால் குறையும். மாடுகள் மிகவும் சோர்ந்து காணப்படுவதுடன், எடை வேகமாகக் குறைந்துகொண்டே போகும்.

கோமாரி நோய் நீர், காற்று முதலியவற்றின் மூலம் மிக விரைவாகவும் எளிதாகவும் பரவும். நோயால் பாதிக்கப்பட்ட மாடுகள் வெளியேற்றும் சிறுநீர், சாணம், எச்சில் போன்றவற்றின் மூலம் பிற மாடுகளுக்கு நோய் எளிதில் பரவும். நோயுள்ள மாடுகள் தும்மும்போது காற்றின் மூலம் வைரஸ் பிற மாடுகளைத் தொற்றிக்கொள்ளும். நோயால் பாதிக்கப்பட்ட தாயிடம் பால் குடிக்கும் கன்றுகளுக்கும் நோய் தொற்றிக்கொள்ளும்.

கோமாரி நோய் வராத வகையில் எல்லா மாடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும். கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட மாட்டை மந்தைகளிலிருந்தும் தொழுவத்திலிருந்தும், பிற மாடுகளிடமிருந்தும் பிரித்து, உடனடியாகத் தனிமைப்படுத்திவிட வேண்டும். அந்த மாட்டைக் கட்டி வைக்க வேண்டுமே தவிர, நடமாட விடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

கேரளாவில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. இதனைத் தடுக்க கேரள அரசு நோய் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் பரவ வாய்ப்புள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கால்நடை டாக்டர், ஆய்வாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய குழுவினர் கல்லாபுரம், மானுப்பட்டி, கோடந்தூர், தளிஞ்சி, ஜல்லிப்பட்டி, செல்லப்பம்பாளையம், வாளவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கால்நடைகளைக் கண்காணிக்கின்றனர். மேலும் இனிவரும் நாட்களில் ஏதேனும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனே அருகில் உள்ள கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை பெற கால்நடை வளர்ப்போரிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது,

மாநில எல்லை கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு கிடையாது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் உள்ள கால்நடைகள் கண்காணிக்கப்படுகிறது. கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்தே கேரளாவுக்கு கால்நடைகள் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கால்நடைகள் பெருமளவு கொண்டு வரப்படுவதில்லை. இருப்பினும் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News