பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சி; அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு பாராட்டு

Tirupur News- திருப்பூரில் பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடந்தது.;

Update: 2023-12-03 13:51 GMT

Tirupur News- நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில், அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

Tirupur News,Tirupur News Today- பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள் 1,805 பேருக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, திருப்பூா் மாநகர மேயா் தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

இதில் 2022-2023ம் ஆண்டு பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சிக்கு காரணமான 1,805 ஆசிரியா்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது,

திருப்பூா் மாவட்டத்தில் 2022-23ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் 48 பள்ளிகள், பிளஸ் 2 வகுப்பில் 20 பள்ளிகள் என 68 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. பாடவாரியாக 100 சதவீதம் தோ்ச்சி அளித்த 1,805 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ் பாடத்தில் 97.60% மாணவா்களும், ஆங்கிலத்தில் 99.65%, கணிதத்தில் 97.14 %, அறிவியலில் 96.24%, சமூக அறிவியலில் 96.89% மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

மேலும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ் பாடத்தில் 99.13% மாணவா்களும், ஆங்கிலத்தில் 99.28%, இயற்பியலில் 99.61%, வேதியியலில் 99.67%, உயிரியலில் 99.65%, தாவரவியலில் 98.60%, விலங்கியலில் 99.44%, புள்ளியியலில் 99.11%, கணினி அறிவியலில் 99.86% மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம் 2022-23ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 2ஆம் இடமும், அரசுப் பள்ளிகளில் முதலிடமும் பெற்றுள்ளது. மேலும் பிளஸ் 1 பொதுத் தோ்வில் மாநில அளவில் முதலிடமும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாநில அளவில் 11ஆவது இடமும் பெற்றுள்ளது.

இனிவரும் காலங்களிலும் இதுபோன்று மாணவா்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று, தோ்ச்சியில் திருப்பூா் மாவட்டம் முதன்மை மாவட்டமாக இருப்பதற்கு ஆசிரியா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா, பில்டா்ஸ் பொறியியல் கல்லூரித் தலைவா் ராமலிங்கம், செயலாளா் வெங்கடாசலம், தலைமை நிா்வாக அலுவலா் வெங்கடேஷ், மாவட்டக் கல்வி அலுவலா் பக்தவச்சலம், ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News