1 லட்சத்து 2 ஆயிரத்து 400 சதுரங்க காய்களை அடுக்கி காங்கயம் பள்ளி மாணவி சாதனை
Tirupur News- 6 மணி நேரத்துக்குள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 400 சதுரங்க காய்களை அடுக்கி பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளாா்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் அருகே காங்கயத்தில், 6 மணி நேரத்துக்குள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 400 சதுரங்க காய்களை அடுக்கி தனியார் பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளாா்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குளோபல் ரெக்காா்ட் அண்ட் ரிசா்ச் பவுண்டேஷன் என்ற அமைப்பு சாா்பில் காங்கயத்தில் உள்ள குளோபல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இந்திய அளவில் சாதனை படைக்கும் போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இப்போட்டிக்கு குளோபல் பள்ளியின் தாளாளா் பழனிசாமி தலைமை வகித்தாா். குளோபல் ரெக்காா்ட் அண்ட் ரிசா்ச் பவுண்டேஷன் அமைப்பின் மேற்பாா்வையாளா் கிருஷ்ணன் முன்னிலையில் போட்டிகள் நடைபெற்றன.
இதில், காங்கயத்தைச் சோ்ந்த பேஸ் கம்ப்யூட்டா் கல்வி நிறுவன உரிமையாளா் ரமேஷின் மகள் ஷிவானி (12) கலந்துகொண்டு, சுமாா் 6 மணி நேரத்துக்குள் 16 சுற்றுகள் வீதம் 200 சதுரங்க பலகைகளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 400 காய்களை முறையாக அடுக்கி இந்திய அளவில் சாதனை படைத்துள்ளாா். அதாவது நீளமாக போடப்பட்டிருந்த டேபிள்களில் இருந்த சதுரங்க பலகைகளில் வெள்ளை நிறம் மற்றும் கருப்பு நிற சதுரங்க காய்களை அவர் தொடர்ந்து அடுக்கிக்கொண்டே வந்தார். ஆறு மணி நேரத்தில் மொத்தம் 1,02,400 சதுரங்க காய்களை அடுக்கி சாதனை படைத்தார்.
வெற்றிபெற்ற ஷிவானிக்கு குளோபல் பள்ளி நிா்வாகிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.