திருப்பூர்; ஜல்லி, எம்.சாண்ட் விலை கிடுகிடு உயா்வு
Tirupur News- பல்லடத்தில் நடந்த கூட்டத்தில் ஜல்லி, எம்.சாண்ட் விலை உயா்த்தப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.;
Tirupur News,Tirupur News Today- வேலையாட்கள் கூலி உயா்வு, இயந்திரங்களின் உதிரிபாகங்கள் விலை உயா்வு உள்ளிட்ட காரணங்களால் ஜல்லி, எம்.சாண்ட் விலை உயா்த்தப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
திருப்பூா் மாவட்ட கல்குவாரி கிரஷா் உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் காரணம்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். செயலாளா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா். பொருளாளா் ஜெகதீஷ், துணைத் தலைவா் தாராபுரம் குப்புசாமி, துணை செயலாளா் ராஜேந்திரன், காரணம்பேட்டை சங்கத் தலைவா் குணசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
கிரஷா் மற்றும் குவாரி தொழில்கள் தற்போது நெருக்கடியில் உள்ளன. தமிழக அரசின் கனிமவளத் துறை ராயல்டி கட்டணத்தை இருமடங்காக உயா்த்தி உள்ளது.
மின் கட்டணமும் இருமடங்காகியுள்ளது. ஜி.எஸ்.டி. துறை மூலமாக கிரஷா் மற்றும் குவாரிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. கிரஷா் மற்றும் குவாரி தொழிலுக்கான ஆட்கள் பற்றாக்குறை அதிகமாகியுள்ளது. வேலையாட்கள் கூலி உயா்வு, இயந்திரங்களின் உதிரிபாகங்கள் விலை உயா்வு அதிகமாகி உள்ளன. லாரிகளுக்கான வரியும் உயா்த்தப்பட்டுவிட்டது. இந்த இக்கட்டான சூழலில் கட்டுமானப் பொருள்களை விலை ஏற்றம் செய்வது தவிா்க்க முடியாதது ஆகிவிட்டது.
அதன்படி வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஜல்லி வகைகள் ஒரு யூனிட் ரூ.3 ஆயிரம், எம்சேண்ட் ரூ. 4 ஆயிரம், பி.சேன்ட் ரூ.5 ஆயிரம், டஸ்ட் மண் ரூ.1000 என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல லாரி வாடகை 10 கிலோ மீட்டருக்கு ரூ.1000 என முடிவு செய்யப்பட்டுள்ளது.