மகளிர் உரிமைத் தொகை பெற, போஸ்ட் ஆபிசில் கணக்கு துவங்க அழைப்பு
Tirupur News,Tirupur News Today- தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை பெற, தங்கள் பகுதியில் உள்ள தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கலாம் என, பெண்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- தமிழக அரசு, மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு, வேகமாக நடந்து வருகிறது. வரும் செப். 15ம் தேதி முதல், இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, பெண்களின் வங்கி கணக்குகளில், மாதந்தோறும் ரூ. ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும்போது, அந்த குடும்ப பெண்களின் பெயரில் வங்கிக் கணக்கு கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வங்கி கணக்கில் மட்டுமே, இந்த மகளிர் உரிமைத் தொகையை தமிழக அரசு, மாதந்தோறும் செலுத்த உள்ளது.
இந்நிலையில், மகளிர் உரிமைத் திட்டத்தில் பெண்கள் மாதந்தோறும் ரூ. ஆயிரம் பெற வசதியாக, தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்களில், வங்கி கணக்கு துவங்கும் வசதியை, அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற, தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க வசதி செய்யப்பட்டுள்ளது. தபால்காரர், கிராம தபால் ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன், பயோமெட்ரிக் சாதனம் மூலம், பயனாளிகள் தங்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி, விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும். இந்த கணக்குக்கு இருப்பு தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத் தொகையை அருகில் உள்ள தபால் நிலையங்களில் அல்லது, சிறப்பு சேவை மூலம் தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள், பிரதமரின் உதவித்தொகை பெறுவோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவோர், தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை பெறுவோர் பயன்படுத்தி வருவோருக்கு பயன்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.