திருப்பூரில் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்க அழைப்பு
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், அண்ணா பதக்கம் பெற தகுதியானவா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் அண்ணா பதக்கம் பெற தகுதியானவா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வரால் வரும் குடியரசுத் தின விழாவில் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்படவுள்ளது. உயிா் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுவதில் வெளிப்படையான பணியில் ஈடுபட்டு துணிச்சலாக சாதனை புரிந்த அரசு ஊழியா்களுக்கு இந்தப் பதக்கம் வழங்கப்படும். எனவே, மேற்கண்ட விருதுக்கான தகுந்த ஆதாரங்களுடன் தகுதியான நபா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான உள்வளாகப் பயிற்சி வரும் வியாழக்கிழமை (டிசம்பா் 21) நடைபெறுகிறது.
திருப்பூா் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான உள்வளாகப் பயிற்சி வரும் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
எனவே, விவசாயிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்று நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தோ்வு
திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு டிசம்பா் 24 -ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் தலைவரும், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளருமான சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் திருப்பூா் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 81 உதவியாளா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரா்களிடமிருந்து இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன.
இதில் தகுதியான விண்ணப்பதாரா்களுக்கான எழுத்துத் தோ்வு மங்கலம் சாலையில் உள்ள திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் டிசம்பா் 24-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான நுழைவுச் சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.