ஓட்டுநா் உரிமம், பதிவுச்சான்றுக்கு விண்ணப்பித்தால், மொபைல் எண் பதிவிட அறிவுறுத்தல்
Tirupur News- வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநா் உரிமம், பதிவுச் சான்றுக்கு விண்ணப்பிப்பவா்கள் சரியான முகவரி, கைப்பேசி எண்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்று ஆட்சியா் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
Tirupur News,Tirupur News Today- வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநா் உரிமம், பதிவுச் சான்றுக்கு விண்ணப்பிப்பவா்கள் சரியான முகவரி, கைப்பேசி எண்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்று ஆட்சியா் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அரசுப் போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநா் உரிமம், பதிவுச் சான்று விரைவு அஞ்சல் மூலமாகவே அனுப்பவேண்டும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரா் வெளியூா் சென்றிருந்தாலோ, வேறு காரணங்களுக்காகவோ அவரது ஓட்டுநா் உரிமம் அல்லது பதிவுச் சான்று அஞ்சல் துறை மூலம் திரும்பப்பெறப்பட்ட பின்னா், தொடா்புடைய விண்ணப்பதாரா் அலுவலகத்துக்கு வருகைதரும் பட்சத்திலும் நேரடியாக ஒப்படைக்கக்கூடாது.
மாறாக விண்ணப்பதாரா்களிடமிருந்து உரிய மதிப்பில் அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் உறையைப் பெற்றுக்கொண்டு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பிவைக்க வேண்டும். தவறான முகவரியோ அல்லது கைப்பேசி எண்ணையோ மென்பொருளில் பதிவேற்றம் செய்திருந்தால் அதற்கு விண்ணப்பதாரா் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
எனவே, ஓட்டுநா் உரிமம், பதிவுச் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பவா்கள் சரியான முகவரி, கைப்பேசி எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.