வடகிழக்கு பருவமழை; பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
Tirupur News- வரும் டிசம்பர் மாதம் வரை, வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதால், பள்ளிக்கட்டிடங்கள், பள்ளி வளாகங்களில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக கல்வித்துறை, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, அக்டோபர் முதல் டிசம்பர் வரையான கால அளவில், இயல்பான அளவில் பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் பருவ மழை காரணமாக விபத்துகள் எதுவும் ஏற்படாமல் இருக்க பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்று சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்று சுவர் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளை சுற்றி, வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
பள்ளியில் சில வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் பாதிக்கப்பட்டு இருந்தால் அதை பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும். அனைத்து மின் இணைப்புகள் சரியாக இருக்கின்றனவா எனவும், மின்கசிவு, மின் சுற்று கோளாறுகள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மின் இணைப்பை துண்டிக்கலாம். மின் மோட்டார்கள் அமைந்துள்ள இடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பள்ளி வளாகத்தில் நீர் தேக்க பள்ளங்கள், திறந்த வெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, தரை மட்ட நீர் தேக்க தொட்டி இருந்தால் அது மூடப்பட்ட நிலையில், பாதுகாப்பாக உள்ளனவா என உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.ஆபத்தான நிலையில் உயர் மின்னழுத்தம் உள்ள மின் கம்பங்கள், அறுந்து தொங்கக்கூடிய மின் கம்பிகள் இருந்தால் அதை மின்வாரியத்தின் உதவியுடன் அகற்ற வேண்டும்.
பள்ளியில் உள்ள அனைத்து கட்டடங்களின் மேற்கூரைகள், கைப்பிடி சுவர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், ஜன்னல் கதவுகள் உறுதியாக இருக்கிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் இருப்பின் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் அதன் அருகே செல்லாமல் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்த வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.