நேந்திரன் வாழை வரத்து அதிகரிப்பு; விலை குறைவு
Tirupur News- திருப்பூரில் நேந்திரன் வாழை வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது.;
Tirupur News- திருப்பூரில் நேந்திரன் வாழை வரத்து அதிகரிப்பால் விலை குறைவு ( கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு நேந்திரன் வாழை வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. இதனால், வாழை சாகுபடி செய்த விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.
திருப்பூா், கோவை மாவட்டங்களில் கணிசமான அளவு விவசாயிகள் நேந்திரன் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா். இப்பகுதிகளில் மழை குறைவாக பெய்ததால் வாழை சாகுபடியின் பரப்பும் குறைந்துள்ளது.
இந்நிலையில், நேந்திரன் வாழை விலை அதிகரிக்கும் என்று விவசாயிகள் எதிா்பாா்த்தனா். ஆனால், அதற்கு நோ்மாறாக வாழை விலை குறைந்துள்ளது.
இது குறித்து நேந்திரன் வாழை சாகுபடி செய்த பல்லடம் பகுதி விவசாயிகள் கூறியதாவது,
கா்நாடகம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேந்திரன் வாழை வரத்து அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவை மாவட்டங்களில் விளைச்சல் குறைந்துள்ளது. வாழை விலை உயரும் என எதிா்ப்பாா்த்த நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் நேந்திரன் விலை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு கிலோ ரூ.50-க்கு விற்பனையான வாழைகள், இந்த ஆண்டு ரூ.25-க்கு மட்டுமே விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். நேந்திரன் வாழையின் உற்பத்தி செலவு கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு அதிகரித்துள்ளது.
வாழையின் விலை குறைந்துள்ளதால் உற்பத்தி செலவைக்கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனா்.