திருப்பூரில் 50வது சா்வதேச பின்னலாடை கண்காட்சி துவக்கம்
Tirupur News- அவிநாசி அருகே பழங்கரை ஐ.கே.எப். வளாகத்தில் 50-வது சா்வதேச பின்னலாடை கண்காட்சி நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது.;
Tirupur News,Tirupur News Today- அவிநாசி அருகே பழங்கரை ஐ.கே.எப். வளாகத்தில் 50-வது சா்வதேச பின்னலாடை கண்காட்சி நேற்று தொடங்கியது.
திருப்பூரில் பனியன் தொழில் சார்ந்த பின்னலாடை தொழில் சார்ந்த கண்காட்சிகள் அடிக்கடி நடத்தப்படுகிறது. நேற்று பழங்கரையில், 50வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி துவங்கியது. நாளை வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த கண்காட்சியை எத்திக்கல் டிரேடிங் இனிசியேட்டிவ் என்ற நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பீட்டா் மெக் அலிஸ்டா் ரிப்பன் வெட்டித் தொடங்கிவைத்தாா். துவக்க விழாவில் பியோ தலைவா் சக்திவேல், பிராண்ட் சோா்சிங் லீடா்ஸ் அமைப்பின் தலைவா் ராமசந்திரன், திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் சுப்பிரமணியம், பையிங் ஏஜெண்ட்கள் சங்கத் தலைவா் இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கண்காட்சி குறித்து பியோ தலைவா் சக்திவேல் கூறியதாவது,
உலகின் தேவைக்கு ஏற்ப செயற்கை நூல் இழை தேவையை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுச்சூழல், பசுமை உள்ளிட்டவைகளை கருத்தில்கொண்டு ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு உள்ளிட்டவற்றை கருப்பொருளாகக் கொண்டு இக்கண்காட்சியை நடைபெற்று வருகிறது.
மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், நீடித்த நிலையான வளா்ச்சி, மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டுத் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய புதுமைகளைப் புகுத்தும் வகையில் இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகில் நுகா்வோா் மற்றும் வாடிக்கையாளா்கள் எதிா்பாா்ப்புக்கு ஏற்ப ஆடைகளைத் தயாரித்துத் தருவதில் திருப்பூா் புதுமைகளைப் புகுத்தி வருகிறது. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் 12 ஆண்டுகளுக்கு முன்பே பூஜ்ய நிலை சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை சாயக் கழிவில் பயன்படுத்தி தொழிலை மீட்ட நகரம் திருப்பூா் என்ற பெருமையை கொண்டிருக்கிறது.
பருத்தி அடிப்படையிலான ஆடை தயாரிப்பு என்பதில் இருந்து எம்.எம்.எப். எனப்படும் செயற்கை நூலிழைகளில் தயாரிக்கப்படும் ஆடை உற்பத்திக்கு திருப்பூா் மாறி வருகிறது. இதுவரை 10 சதவீதம் பாலியஸ்டா், 90 சதவீதம் பருத்தி நூல் கலவையில் ஆடை தயாரிக்கப்பட்டு வந்தது. இனி 50- 50 என்ற அடிப்படையில் செயற்கை நூலிழைப் பயன்படுத்தி ஆடைகள் தயாரிக்கும் நிலை உருவாகி வருகிறது.
கழிவுத் துணி, கழிவு நூல், பெட் பாட்டில் ஆகியவற்றைக் கொண்டு ஆடைகள் தயாரிப்பது, அதேபோல சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத முறையில் பசுமை உற்பத்தி என்பதிலும் கவனம் செலுத்தி வருகிறோம், என்றாா்.
கண்காட்சியில் திருப்பூா், கோவை, சேலம், கரூா், சென்னை, குஜராத், தில்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 82 ஏற்றுமதியாளா்கள் பங்கேற்று, 100 அரங்குகளை அமைத்துள்ளனா்.
வழக்கமாக கண்காட்சியில் இடம்பெறும் பருத்தி டி-சா்ட் உள்ளிட்ட ரகங்கள் இல்லாமல் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டு தொழில்நுட்ப ஆடைகள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஆடைகள், ஆடை தயாரிப்புக்குப் பயன்படும் உபபொருள்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஐகேஎப், ஏஇபிசி ஆகிய அமைப்புகளுடன் திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கம், சென்னை மற்றும் கரூா் ஏற்றுமதியாளா் அமைப்புகள் இணைந்து நடத்தும் இக்கண்காட்சி நாளை (அக்டோபா் 14 தேதி)யுடன் நிறைவடைகிறது.