அவிநாசியில் 70வது கூட்டுறவு வார விழா துவக்கம்
Tirupur News-அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா தொடங்கியது.;
Tirupur News, Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா தொடங்கியது.
இவ்விழா வருகிற 20-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. விழாவை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கலந்து கொண்டு கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மரகன்றுகள் நடும் விழாவும், நாளை (வியாழக்கிழமை) பொங்கலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்கள் சந்திப்பு முகாமும் நடைபெற உள்ளது.
மேலும் தொடர்ந்து 17-ம் தேதி அன்று கூட்டுறவு அமைப்புகளை பரவலாக்குதல் மற்றும் எளிமைப்படுத்துதல் என்ற தலைப்பில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 18-ம் தேதி என். காஞ்சிபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை மருத்துவ முகாமும், 19-ந்தேதி திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டசாலையில் விற்பனை மேளாவும் நடைபெற உள்ளது.
வரும் 20-ம் தேதி (திங்கட்கிழமை) குடிமங்கலம் ஜெயராணி மகாலில் மாவட்ட அளவிலான கூட்டுறவு வாரவிழாவின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்கள் மற்றும் கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளனர்.
விழாவில் பொதுமக்கள் மற்றும் கூட்டுறவாளர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டுள்ளது.