திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 18, 19-ம் தேதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.;

Update: 2023-11-04 16:34 GMT

Tirupur News- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 18-ம் தேதி, 19-ம் தேதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

வருகிற ஜனவரி மாதம் 1-ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ஜூலை மாதம் 1-ம் தேதி, அக்டோபர் மாதம் 1-ம் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம். மேற்படி முன்னதாக வரப்பெற்ற படிவங்கள் சேர்க்கப்பட்டு அவை அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாத வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

சிறப்பு முகாம் நடக்கும் நாளன்று வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக படிவம் 8-ஐ விண்ணப்பிக்கலாம். பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் படிவம் 7-ஐ விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதவிர https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற செயல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2971110, கட்டணமில்லா தொலைபேசி 1950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

தாராபுரம், காங்கயம், அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அந்தந்த தாசில்தார்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாகவும், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி உதவி ஆணையாளர், உதவி வாக்காளர் பதிவு அலுவலராகவும் உள்ளனர். இதுதவிர தாராபுரம், காங்கயம் தொகுதிக்கு தாராபுரம் ஆர்.டி.ஓ., அவிநாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம் தொகுதிக்கு திருப்பூர் சப்-கலெக்டர், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ.வும் வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News