கேரள- தமிழக எல்லை பகுதியில், 526 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை; சுகாதாரத்துறை நடவடிக்கை
Tirupur News-கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை அடுத்து, கேரள- தமிழக எல்லை பகுதிகளில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.;
Tirupur News,Tirupur News Today - கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உயிர்கொல்லி நோயான நிபா வைரஸ் பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினரால் தமிழக - கேரளா எல்லையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளன.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான ஒன்பதாறு சோதனைச் சாவடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் கண்காணிப்பு பணியை தொடங்குமாறு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஒன்பதாறு சோதனை சாவடியில் பரிசோதனை மேற்கொள்வதற்கு மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர்,செவிலியர் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.அந்த குழுவினர் 24 நேரமும் கேரளாவில் இருந்து, தமிழகத்திற்குள் வருகின்ற வாகன ஓட்டிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் நிபா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அப்போது காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடுமலை அரசு மருத்துவமனை மற்றும் அமராவதி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு பரிந்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நேற்று நடந்த முகாமில் 111 வாகனங்களில் தமிழகத்திற்கு வருகை தந்த 526 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அப்போது யாருக்கும் காய்ச்சல் கண்டறியப்படவில்லை. இந்த பணியில் சுகாதாரத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன்களிலும், மருத்துவ பரிசோதனை அவசியம்
சாலை வழி போக்குவரத்து மட்டுமின்றி, தமிழகத்தில் இருந்து ஏராளமான ரயில்கள், கேரளாவுக்கு சென்று வருகின்றன. அதே போல், கேரளாவில் இருந்தும், தமிழகத்துக்கு அதிகளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, கோவை, திருப்பூர் வழியாக அதிகளவில் கேரளா பகுதியைச் சேர்ந்த மக்கள், தமிழகத்துக்கு வருகின்றனர். எனவே, கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களிலும், நிபா வைரஸ் குறித்த மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். மேலும், கோவை விமான நிலையத்திலும் கேரளாவை சேர்ந்த மக்கள் அதிகளவில் வர வாய்ப்புள்ளதால், அங்கும் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கான மருத்துவ பரிசோதனை மிகவும் முக்கியம் என, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.