ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
Tirupur News- ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tirupur News,Tirupur News Today- ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் அண்ணாமலையிடம், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எம்.ஈஸ்வரன் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த 60 ஆண்டு கால கோரிக்கையான, ஆனைமலை - நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி திருப்பூா் கோவை, ஈரோடு, கரூா் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கலூா், சூலூருக்கு இடையே உள்ள பகுதி மிகவும் வறட்சி நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதிக்கு, கோவை மாவட்டம், பள்ளபாளையம் குளத்தில் இருந்து தண்ணீா் கொண்டு வர வேண்டும். தென்னை விவசாயிகளைப் பாதுகாக்க நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும். கள்ளுக்கான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து மானியங்களும், நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கி வரும் நிலையில் அதை ரூ.12 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.