ஊத்துக்குளியில் தலையணையால் அமுக்கி மனைவியை கொலை செய்ய முயற்சி; கணவர் உள்ளிட்ட 5 பேர் கைது
Tirupur News,Tirupur News Today- ஊத்துக்குளி அருகே மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து, தலைணையால் அமுக்கி, கொலை செய்ய முயற்சி செய்த கணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;
Tirupur News,Tirupur News Today- மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவர் உள்ளிட்ட 5 பேர் ஊத்துக்குளியில் கைது (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டுபாளையம் செம்பாவல்லம் ரோடு பொன்னேகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது 38). பனியன் நிறுவன உரிமையாளர். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மாங்கனி (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும் தங்கள் பெற்றோரிடம் எந்த தொடர்பும் இல்லாமல் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணிமாறன் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிமாறனின் தந்தை ஆடலரசு தன்மகனைப் பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் மாமனார் வந்ததை விரும்பாத மாங்கனி அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிமாறன், தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மனைவியை தீர்த்துக்கட்ட மணிமாறன் முடிவு செய்தார். இதற்காக தனது நண்பரான ஊத்துக்குளியில் வேலை செய்து வரும் தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி நொச்சிகுட்டை தாழநந்தம் பகுதியைச் சேர்ந்த வேலு (34), மற்றும் ஊத்துக்குளி சுற்றுவட்டார பகுதியில் வேலை செய்து வரும் வேலுவின் நண்பர்கள் விவேக் என்கின்ற விவேகானந்தன் (35), முனிரத்தினம் (27), ஜான் ஜோசப் (45) ஆகியோருடன் சேர்ந்து மணிமாறன் திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, இரவு மாங்கனி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மணிமாறனின் வீட்டிற்கு 4 பேரும் வந்துள்ளனர். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாங்கனியை தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் மாங்கனி அலறியதால், அவர்கள் கொலை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து மாங்கனி ஊத்துக்குளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் மணிமாறன், வேலு, விவேகானந்தன், முனிரத்தினம், ஜான் ஜோசப் ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காதல் மனைவியை கணவரே நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.